சாய்ந்தமருது நகர சபைக்கான செயலாளரை நியமிக்கவும்!
சாய்ந்தமருது நகர சபைக்கான அலுவலகத்தை அமைப்பதற்கும், அதற்கான செயலாளரை உடனடியாக நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சாய்ந்தமருது சட்டத்தரணிகள் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்திற்கான பதில் கடிதமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மத்திய பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரூடாக, விடயப்பரப்புக்குரிய அமைச்சரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அறிவித்து ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், உள்ளூராட்சி சபைகளைக் கையாளுவது மற்றும் நிருவகிப்பது தொடர்பான முழுமையான அதிகாரங்கள், தற்போதைய இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் மாகாண ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 13 வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு எனப் பிரத்தியேகமாக மாகாண சபை நிரலில் வழங்கப்பட்டுள்ள மிகக் குறைவான அதிகாரங்களில், இந்த உள்ளூராட்சி சபைகள் தொடர்பான அதிகாரமும் ஒன்றாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், அரசியல் அமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பிரத்தியேக அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் தயங்குவதும், மத்திய அரசின் ஆலோசனையை நாடி காலத்தைக் கடத்துவதும் ஆச்சரியமளிப்பதாக சாய்ந்தமருது சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரப் பகிர்வுக்காகவும், மாகாண சபை முறைமைக்காகவும் மிக நீண்டகாலமாகப் போராடி வரும் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில், அதற்கு ஆளுநராக இருப்பவர் தமக்குரிய அரசியல் அமைப்பு ரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தத் தவறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு விடயமாகும் என்றும் அக்கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக மதித்து, மத்திய அரசின் ஆலோசனைகளைக் காரணம் காட்டி காலத்தை வீணடிக்காமல், சாய்ந்தமருது நகர சபைக்கான செயலாளரை உடனடியாக நியமித்து, அச்சபையின் நிருவாகச் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரைச் சாய்ந்தமருது சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்துவதாக கேரியுள்ளது.
சாய்ந்தமருது நகர சபைக்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நகர சபை ஸ்தாபிக்கப்பட்டமை சட்டப்பூர்வமாக செல்லுபடியானதென அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

