தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ
2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், தென் ஆபிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகெங்கும் உள்ள கால்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் மெக்சிகோவில் கோலாகலமாகத் தொடங்கியது. இத்தொடரின் தொடக்க விழா உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் ஷகீரா மற்றும் நைஜீரியாவின் பர்னா பாய் ஆகியோரின் அதிரடி இசையுடன் தொடங்கியது. அவர்கள் இத்தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான ‘டாய் டாய்’ பாடலைப் பாடி இரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
தென் ஆபிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் செய்த தவறான பாஸை பயன்படுத்தி மெக்சிகோ இந்த கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 2ஆவது பாதியில் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. 50ஆவது நிமிடத்தில் தென் ஆபிரிக்காவின் யா யா சிதோலே முரட்டுத்தனமான ஆட்டத்தால் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்திய மெக்சிகோவின் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ், 67ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு அபாரமான கோல் அடித்து அசத்தினார். கடந்த 2020இல் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 9 மாதங்கள் ஓய்வில் இருந்த ஜிமினெஸின் இந்த கோல் மைதானத்தில் இருந்த இரசிகர்களை நெகிழ வைத்தது.

