அக்வான் புயல் தீவிரமடைந்தது – கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய ஆழ்கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) அதிகாலை 5.30 மணியளவில், திருகோணமலையிலிருந்து சுமார் 650 கிலோமீற்றர் தொலைவில், வட அகலாங்கு 12.7 பாகை மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.5 பாகை பகுதியில் இந்தப் புயல் மையம் கொண்டிருந்தது.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையில் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை 06°N–20°N அட்சரேகைகளுக்கும் 80°E–95°E தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

