இலங்கையில் அதிகரிக்கும் குறைமாதப் பிரசவங்கள்: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் குறைமாதப் பிரசவங்கள்: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிரசவங்களில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிரசவங்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக குறைமாதக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இலங்கை மகப்பேற்று மருத்துவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி, குறைமாதக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதுடன் சுகாதாரக் கட்டமைப்பின் பொறுப்பு நிறைவடையக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கர்ப்பகாலம் முழுமையடைவதற்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பும் நீண்டகால மருத்துவக் கண்காணிப்பும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையின் முன்னேற்றம் காரணமாக குறைமாதக் குழந்தைகளைக் காப்பாற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிப்படுத்த உயிரைக் காப்பாற்றுவது மாத்திரம் போதுமானதல்ல என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைமாதக் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகள் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (NICU) வெளியேறிய பின்னரும் தோன்றக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை வழங்குவதற்கு தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் வளர்ச்சி மதிப்பீடுகளும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு முறையான தொடர் மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறைமாதக் குழந்தைகளுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்காக அரச சுகாதாரக் கட்டமைப்பு, தொழில்சார் அமைப்புகள், தனியார் துறை மற்றும் ஏனைய தரப்பினருக்கு இடையில் வலுவான ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறைமாதக் குழந்தைகளின் ஆரோக்கியம், நலன் மற்றும் எதிர்கால சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட வழிகாட்டல் தொகுப்பும் குறித்த நிகழ்வின்போது வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

manel

Related Posts