மக்களுக்கான சிறந்த படைப்பாக டீசல்
மக்களுக்கான சிறந்த படைப்பாக டீசல் உருவாகியுள்ளதாக அதன் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.தெரிவித்துள்ளார்.
இவர் காலஞ்சென்ற இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
“காதல், நகைச்சுவைப் படங்கள், பேய்க் கதைகள் எனப் பல ரகங்கள் நம்மிடையே உள்ளன. நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலைப் பேச மறந்துவிட்டோம்,” என்று சண்முகம் முத்துசாமி கவலைப்படுகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் இல்லாமல் மனிதர்களால் வாழ இயலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாகச் சுட்டிக்காட்டுபவர், பெட்ரோல், டீசல் பின்னால் இருக்கும் மிகப் பெரிய அரசியல் குறித்து பெரும்பாலானோர்க்குத் தெரியாது என்கிறார்.
“பெட்ரோல் எப்படி நம்மை வந்தடைகிறது என்பதை இந்தப் படம் விவரிக்கும். இது மக்களிடம் சென்றடைய வேண்டிய அரசியல்.
“மக்கள் கேள்வி கேட்க வேண்டிய அரசியல். பலரும் சொல்லத் தயங்குவதை நாங்கள் ‘டீசல்’ படம் மூலம் தெளிவாகப் பேசியுள்ளோம்,” என்கிறார் சண்முகம் முத்துசாமி.

