வீழ்ச்சியடையும் ரூபாயை எவ்வாறு பாதுகாப்பது? – விஜித விளக்கம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சியை வரும் நாட்களில் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து கணிசமான அளவு டொலர்கள் நாட்டிற்குள் வரவிருப்பதாலும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த நிலைமையை அரசாங்கத்தால் மேலாண்மை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் வேகமாக உயரக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்:
“சர்வதேச நாணய நிதியம் இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சுமார் 700 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. அது நமக்குக் கிடைக்கும் என நம்புகிறோம். அதேபோல் ஆசிய வளர்ச்சி வங்கி மேலும் 200 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. அதனூடாக மேலும் ஒரு தொகை டொலர்கள் நாட்டிற்குள் வரும். அத்துடன் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டொலர்கள் வௌியேறுவது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும்.
மறுபுறம், டொலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுடன் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே இந்த மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் மூலம் எம்மால் இதனை சீராகக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.”

