லாவோஸ் குகையிலிருந்து மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டனர்
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் 10 நாட்களாக சிக்கியிருந்த மேலும் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் மூழ்காளர் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இருவரைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர், வெள்ளம் சூழ்ந்த குறுகிய சுரங்கங்கள் கூர்மையான பாறைகள் ஆகியவற்றின் வழியாகத் தொடர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஏழு பேர் கொண்ட குழுவில் முதல் நபர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார் .
சனிக்கிழமை மீட்கப்பட்ட நான்கு பேரும், புதன்கிழமை அன்று குகை நுழைவாயிலிலிருந்து சுமார் 300 மீற்றர் (980 அடி) தொலைவில் உள்ள ஒரு அறைக்குள், பாறை விளிம்பில் ஒருவரையொருவர் நெருக்கமாக அணைத்துக்கொண்டு பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
காணாமல் போன மீதமுள்ள இருவரையும் தேடும் பணி தொடர்கிறது. ஒரு இளம் தாய்லாந்து உதைபந்தாட்ட அணியின் பரபரப்பான மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட சர்வதேச மூழ்காளர் குழுக்கள் , அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், குறுகிய பாதைகளிலும் குறைந்த பார்வைத் திறனிலும் சேற்று நீரில் தவழ்ந்தும் வளைந்தும் தேடி வருகின்றனர்.
தங்கத் தாது போன்ற மதிப்பு
தங்கத் தாது போன்ற மதிப்புமிக்க கனிமங்களைத் தேடுவதற்காக அந்த ஆண்கள் கடந்த வாரம் குகைக்குள் நுழைந்ததாகவும், ஆனால் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டதாகவும் கருதப்படுகிறது. அந்த வெள்ளம் மணலையும் சரளைக்கற்களையும் உள்ளே கொண்டுவந்து, முக்கியமான வெளியேறும் வழியைத் தடுத்தது.

