பாதிக்கப்பட்ட இரத்தினபுரி நீலகாம மக்களுக்கு நீதி கிடைக்கும்
நீலகாமம் தோட்டத்தில் மலையக மக்கள் தோட்ட அடியாட்களால் தாக்கப்பட்டது தொடர்பாக தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வந்த பிரதி அமைச்சர் தொடர்ந்தும் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் குறிப்பிட்ட பிரச்சனை இடம்பெற்ற இடத்தினை நேரடியாக சென்று பார்க்கும் பொருட்டு அவ் பிரதேசத்திற்கு இன்றைய தினம் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ மற்றும் பெல்மடுல்ல பிரதேச சபை உறுப்பினர்களுடன் சென்றிருந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தற்காலிக வீடு அமைக்கப்பட்டு இருந்த இடத்தினையும் நேரடியாக சென்று பார்வையிட்டு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களையும் சந்தித்து விடயங்களை கேட்டு அறிந்தார்.
அவருடைய வருகைக்காக காத்திருந்த நீலகாம மக்கள் நடந்த சம்பவம் பற்றியும், அவர்களுடைய பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் தெளிவுபடுத்தியதுடன் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதியமைச்சிருக்கு முன் வைத்திருந்தனர்.
குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக ஆரம்பம் முதல் தமது கவனத்தை செலுத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களும் ஊர் மக்களும் பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை தொடர்பாக பிரதி அமைச்சருக்கு மனு ஒன்றினையும் கையளித்தனர்.
இப்பிரச்சனை தொடர்பாக தொடர்ந்தும் தனது கவனத்தை செலுத்துவதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர்,
குறிப்பிட்ட பிரச்சனைக்கு முகம் கொடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் சரியான நியாயத்தினை வெகு விரைவில் பெற்று தருவதற்கும், தோட்டங்களில் காணப்படும் தனியார் பாதுகாப்பு படைகள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய செயற்பாட்டினை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதற்கும் முடிவெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

