இலங்கை ‘ஏ’ – பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் இன்று இறுதிப் போட்டியில் மோதல்!

கட்டாரின் தோஹா நகரில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ‘ஏ’ அணி இன்று (29) மாலை நடப்புச் சம்பியனான பாகிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.இந்த தொடரில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுத் தோல்வியறியாத அணிகளாக இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள இலங்கை அணி, இன்று தனது மூன்றாவது கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகின்றது.

மறுபுறம் 2019, 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் சம்பியனான பாகிஸ்தான் அணி, தனது நான்காவது பட்டத்தை வெல்லும் இலக்குடன் விளையாடவுள்ளது.

இலங்கை ‘ஏ’ அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரையிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த இந்திய ‘ஏ’ அணிக்கு எதிராக இவ்விருவரும் இணைந்து 174 ஓட்டங்களைப் பகிர்ந்தமை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

இத்தொடரில் இதுவரை 260 ஓட்டங்களைக் குவித்துள்ள லசித் குரூஸ்புள்ளே (சராசரி 86.66), அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.ஆரம்பப் போட்டிகளில் தடுமாறிய 21 வயதான சினெத் ஜயவர்தன, பயிற்றுவிப்பாளர் அஷான் பிரியஞ்சன் உள்ளிட்ட குழாமினரின் ஊக்குவிப்பால் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதியில் 70 பந்துகளில் 105 ஓட்டங்களைக் குவித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இவர்களுடன் நிஷான் மதுஷ்க, அணித்தலைவர் பவன் ரத்நாயக்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கின்றனர். பந்துவீச்சில் நிபுன் தனஞ்சய, வனுஜ சஹான், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர்.

குழுநிலைப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ (6 விக்கெட்டுகள்), ஹொங்கொங் (24 ஓட்டங்கள்) மற்றும் பங்களாதேஷ் ‘ஏ’ (7 விக்கெட்டுகள்) ஆகிய அணிகளை வீழ்த்தி ‘ஏ’ குழுவில் முதலிடம் பிடித்த இலங்கை அணி, அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி நிர்ணயித்த 318 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை 51 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகளால் அபாரமாக வெற்றி கொண்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மறுபுறம் பாகிஸ்தான் ‘ஏ’ அணி, குழுநிலைப் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம் (61 ஓட்டங்கள்), இந்தியா ‘ஏ’ (48 ஓட்டங்கள்) மற்றும் நேபாளம் (96 ஓட்டங்கள்) ஆகிய அணிகளை வீழ்த்தியதுடன், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை 5 விக்கெட்டுகளால் வென்று 7 தொடர்களில் 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

manel