வியட்நாமில் இறைச்சிக்காக வைத்திருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு

வியட்நாமில் இறைச்சிக்காக வைத்திருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் கடந்த மூன்று வருடங்களாக தெற்கு பகுதி முழுவதும் பூனைகளைத் திருடி, இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களிடமிருந்து உயிருடன் இருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகளும், பனிக்கட்டியில் வைக்கப்பட்டிருந்த 80 இறந்த பூனைகளும் மீட்கப்பட்டன.

வியட்நாம் சட்டப்படி பூனை இறைச்சி விற்பனைக்கு அனுமதி இருந்தாலும், அதற்கான முறையான சான்றிதழ்கள் அவசியமாகும்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை சர்வதேச விலங்கு நல அமைப்பான ‘ஹியூமேன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்’ (Humane World for Animals) பாராட்டியுள்ளது.

மீட்கப்பட்ட பூனைகளில் 40 பூனைகள் இதுவரை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனினும், திருடப்பட்டபோது ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் காரணமாக மீட்கப்பட்ட பூனைகளில் சுமார் 100 பூனைகள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது காவல் நிலையத்தில் சான்றுகளாக வைக்கப்பட்டுள்ள எஞ்சிய பூனைகளுக்குத் தேவையான உணவு மற்றும் மின்விசிறி வசதிகளை விலங்கு நல அமைப்பு செய்து கொடுத்துள்ளதுடன், அவற்றைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

manel