நீர்ப்பாசன அபிவிருத்தி மூலம்கிராமிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்!
ஜனாதிபதி தலைமையின் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை துரிதப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல்
நீர்ப்பாசனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொடுக்க முடிவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக் காட்டினார்.
ரஜரட்ட பாரிய நீர்ப்பாசனக் கட்டமைப்பில் இணையவிருக்கும் மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்துவத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அதன் எதிர்காலப் பணிகளுக்குத் தடையாக உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அங்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் குறித்து மேலும் கலந்துரையாடியதுடன், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல சாதகமான முடிவுகளும் இதன்போது எடுக்கப்பட்டன.
10 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு இன்மையால் இடையில் கைவிடப்பட்ட கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மல்கத்து ஓயா கீழ் பகுதியில் கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் முக்கிய காரணியான நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், தந்திரிமலைப் பிரதேசத்தில் புதிய அபிவிருத்திப் பகுதியை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தில் உள்ள யோதவாவி மற்றும் அகிதமுருப்பு வாவி ஆகியவற்றுக்குட்பட்ட 40,000 ஏக்கர் வயல் நிலங்களை சிறு மற்றும் பெரும் போகங்களில் பயிரிட்டு பயிர் அடர்த்தியை அதிகரித்தல், குடிநீர் வழங்கல், நீர்மின் உற்பத்தி மற்றும் அப்பகுதியின் வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலா வலயமொன்றை ஆரம்பித்தல், மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் காட்டு யானைப் பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றை இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. கீழ் மல்கத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை 2029 – 2030 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதுடன். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் வடமத்திய மாகாணத்தின் மிகப்பாரிய நீர்த்தேக்கமாக இது மாறும்.
நீர்ப்பாசனத் திட்டத்திற்காக காணிகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயரும் மக்களுக்கு முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்கும் வகையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, அந்த மக்களுக்காக நவீன விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், தனியார் துறை விற்பனை நிலைய வலையமைப்புகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் கொள்வனவு ஒப்பந்தங்கள் ஊடாக அவர்களின் உற்பத்திகளுக்கு நிலையான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வனஜீவராசிகள் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து யானை வேலியை நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் வெற்றிகரமான நீண்டகால உயிரியல் தீர்வாக பனை வேலி போன்ற இயற்கையான வேலிகளை ஸ்தாபித்தல் தொடர்பில், வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக்க வண. தந்திரிமலை சந்தரதன தேரர் முன்வைத்த பரிந்துரை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த “குடா விலச்சி வாவித் திட்டத்தை” மீள ஆரம்பித்தல் உட்பட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை புனரமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டமானது ரஜரட்ட மக்களின் பாரிய எதிர்பார்ப்பாகும் என இதன்போது சுட்டிக்காட்டிய தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வண. தந்திரிமலே சந்தரதன தேரர்,
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதற்காக மேற்கொள்ளும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். இத்திட்டம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக்கூடிய வகையில் இன்றைய தினம் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய ஆகியோர்களுடன், பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உட்பட சம்மந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதானிகள் மற்றும் பிரதிநிதிகள், பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதான திட்டப் பணிப்பாளர் அனுர நெலுகொல்ல உள்ளிட்ட திட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

