நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!
நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் தொழில்நுட்ப சாதனங்களைப் பொறுத்தும் பணிகள் இன்று (5) மேற்கொள்ளப்பட்டன.
ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படுவதுடன், அவற்றின் வெற்றி மற்றும் செயற்பாடுகளைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் இயங்கும் ஏனைய பேருந்துகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் சாரதிகளைக் குற்றவாளிகளாக்குவதற்குப் பதிலாக, பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
வாகனம் செலுத்தும் போது சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது சோர்வு ஏற்படுதல், தொலைபேசியைப் பயன்படுத்துதல் மற்றும் ஆசனப் பட்டையை (Seatbelt) அணியாதிருத்தல் போன்ற பாதுகாப்பற்ற செயல்கள் கண்டறியப்பட்டால், ‘குரல் செய்தி’ (Voice Message) மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும்.
இதன்மூலம் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வழிவகுக்கும்.

