கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா

கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டம், கந்தபளை கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் இன்று 03/07/2026 காலை 10.30 மணிக்கு புதிய பிரதான நுழைவாயில் திறப்பு விழா நடைபெற்றது.
(பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில்) பாடசாலையின் பிரதான நுழைவாயில் கட்டப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இணைப்பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு, வகுப்புத் தலைவர்கள் கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியன சிறப்பாக நடைபெற்றன.நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதையடுத்து, பாடசாலையின் புதிய பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி, மாகாணக் கொடி, பாடசாலைக் கொடி மற்றும் சாரணர் கொடி ஆகியவை ஏற்றப்பட்டன.
பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்ந்து பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மங்களக் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றதுடன், வரவேற்பு நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
மேலும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண நுவரெலியா கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. கே. கணேசன், கந்தபளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கந்தபளை தோட்ட முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களது சாதனைகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
மேலும் புதிய வகுப்புத் தலைவர்களுக்கான சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.

