IMF திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு செப்டெம்பரில் ஆரம்பம்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்த உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த காரணிகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வின் போது கவனமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும், இதில் திட்ட இலக்குகளில் சாத்தியங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வர்த்தக பதட்டங்கள் அல்லது நிச்சயமற்ற தன்மையின் தாக்கங்கள் உட்பட இலங்கையின் பொருளாதாரம் குறித்த ஒட்டுமொத்த மதிப்பீட்டையும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாக, அதன் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

