பொருளாதார நெருக்கடியை மறைக்க ‘சலே’ விவகார நாடகம்!
நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக பொருளாதார நெருக்கடி உருவெடுத்துள்ள நிலையில், அதனை மூடிமறைப்பதற்காக அரசாங்கமும் ராஜபக்ச தரப்பினரும் இணைந்து அரங்கேற்றும் ஒரு கூட்டு நாடகமாகவே ‘சலே’ விவகாரத்தை நான் பார்க்கிறேன் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளமாகும். அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்டதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் தெரியவரும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால், முதலாவதாகப் பயனடைந்தவர்கள் ராஜபக்சக்களும் பொதுஜன பெரமுனவினருமாவர். அதன் பின்னரான சூழலில், இந்த விடயத்தை மையப்படுத்தி அதிகாரத்திற்கு வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினராவர்.
இந்தத் தாக்குதலினால் நாம் மூன்று விதமான பெரும் சவால்களைச் சந்தித்தோம். முதலாவதாக, அரசியல் சதித் திட்டங்களால் அரங்கேற்றப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. இரண்டாவதாக, முஸ்லிம் சமூகமாகிய நாம் பல்வேறு சவால்களுக்கும், அபாண்டமான பழி சுமத்தல்களுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. மூன்றாவதாக, இந்தத் தாக்குதலைக் கருவியாக்கி எமது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாம் தொடர் தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது.
இந்தத் தாக்குதலினால் எம்மீது பலிசுமத்தப்பட்டாலும், உண்மையான சூத்திரதாரிகள் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்று நாட்டின் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியிருக்கும் சூழலில், அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த அரசாங்கம் ‘சலே’ விவகாரத்தை ஒரு பிரதான கதாநாயகனாக்கி அரசியல் இலாபமடைந்து வருகிறது.
பொதுஜன பெரமுனவும் அவர்களது சகாக்களும் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, இந்த விவகாரத்தை வைத்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உண்மையில் தற்போது நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக இரு தரப்பும் இணைந்து ஒரு நாடகத்தை நடத்துகின்றன. இதனால், நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்திற்குச் செல்லும் வரை இந்த இரு தரப்பும் இத்தகைய தொடர் நாடகங்களை அரங்கேற்றவே போகிறார்கள். இந்த விடயத்தை நாம் இரு வேறு நிலைப்பாடுகளிலிருந்தே அவதானிக்கிறோம்.
எமக்கு நாட்டின் பொருளாதார மீட்சியும் அவசியம், அதேபோல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியும் வேண்டும். இதுவே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, அரசியல் நாடகங்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு, உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும், பொருளாதார மீட்சியை அடைவதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

