இலங்கையின் அணுசக்தி தயார்நிலை மறுஆய்வு திட்டம் ஆரம்பம்
இலங்கையின் அணுசக்தித் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் அணுசக்திக்கான தயார்நிலையை மறுஆய்வு செய்யும் சிறப்புத் திட்டம், எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடியின் தலைமையில் இன்று (14) கொழும்பில் ஆரம்பமானது.
இலங்கை அணுசக்தி சபையின் (SLAEB) ஏற்பாட்டில், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) நிபுணர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்ச்சி ஜூலை 18 வரை நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த மறுஆய்வுத் திட்டம் இலங்கையின் அணுசக்தித் துறையின் முன்னேற்றத்திற்கு முக்கிய படியாக அமையும் என்றார்.
அணுசக்தி நம்பகத்தன்மை, குறைந்த செலவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தில் (LTGEP 2025–2044) அணுசக்தி அடிப்படை முறையாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இன்னும் அணுசக்தி பயன்பாடு குறித்த இறுதி முடிவை எடுக்கவில்லை என்றாலும், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

