50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவல, கேரோலினா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வட்டவல பிரதேச வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 9.15 மணியளவில் நீர்கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணம் செய்திருந்தனர். விபத்து ஏற்பட்ட நேரத்தில் வண்டியை செலுத்தியது மகள்களில் ஒருவராகும் என தெரிவிக்கப்படுகிறது.
கேரோலினா பகுதியில் உள்ள பெரிய வளைவு கொண்ட இடத்தில் எதிரே வந்த காருக்கு இடம் வழங்க முயன்றபோது, வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் வண்டியை ஓட்டிய இளம் பெண், அவரது தாய் மற்றும் தங்கை காயமடைந்துள்ளதுடன், தந்தைக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக வட்டவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

