நாடளாவிய போராட்டத்துக்கு ஆதரவா? பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் நாளை தீர்மானம்

எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் எனப் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தாங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகள் காரணமாக, குறித்த போராட்டத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவை வழங்க வேண்டும் என நாடளாவிய ரீதியிலுள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இரண்டு, தமது விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வந்த தரகுப் பண (விற்பனைக் கழிவு) சதவீதத்தை 2025ஆம் ஆண்டு முதல் நியாயமற்ற முறையில் குறைத்துள்ளமையால், தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பெரும் சிரமமாகியுள்ளதாகப் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் அறவிடப்படும் ‘வெட்’ (VAT) வரிச் சுமையைத் தாங்க முடியாமை, தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமை மற்றும் தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் நிர்வாகமும் உரிய தலையீட்டை வழங்காது பராமுகமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இதற்குப் பின்னணியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு முறையான ஒழுங்குபடுத்துநர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமை மற்றும் எரிபொருள் விநியோகத்தை உடனடியாக ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் எரிபொருள் கைத்தொழிலும் விநியோகஸ்தர்களும் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உரிய அதிகாரிகள் சந்தர்ப்பம் கூட வழங்காமையால், நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (29) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

manel