நுவரெலியா பொருளாதார மையத்தில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து, அவர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டது
நுவரெலியா மாவட்ட சிறு தொழில் அபிவிருத்திப் பணிப்பாளர் நந்தன பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நுவரெலியா இளைஞர் விவசாயிகள் சங்கம், தேசிய விவசாயிகள் குரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் “உபகண்டி விவசாயிகள் கூட்டமைப்பு லிமிடெட்” (Up Country Farmers Alliance Limited) என்ற பெயரில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மலையக மரக்கறி வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உருளைக்கிழங்கு, கரட், லீக்ஸ், கோவா, பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மரக்கறிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. இங்கு நிர்ணயிக்கப்படும் மொத்த விலைகள் தேசிய சந்தை விலைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனினும், பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே விலை நிர்ணய முறை தொடர்பில் விவசாய அமைப்புகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் முன்வைத்து வருகின்றன.
விலைச் சுட்டெண்ணில் அறிவிக்கப்படும் விலையை விட குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் அதிக விலையில் சந்தைக்கு விடப்படுவதன் மூலம் இடைத்தரகர்களே அதிக இலாபம் அடைகின்றனர் என்றும், இதனால் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், மலையக மரக்கறிகளின் விலை நிர்ணய அதிகாரம் குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகளிடம் குவிந்திருப்பதால் சந்தையில் விலை மாற்றங்கள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதாகவும் விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
சில காலங்களில் பெரியளவிலான உற்பத்தியாளர்கள் மற்றும் நுவரெலியா பொருளாதார மைய வியாபாரிகளின் அறுவடை காலங்களில் விலைகள் உயர்ந்த நிலையில் தக்கவைக்கப்பட்டு, பின்னர் திடீரென குறைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலைக்கு மாற்று ஏற்பாடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய மொத்த சேகரிப்பு நிலையத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், வெளிப்படையான விலை நிர்ணய முறைமை ஒன்றை உருவாக்கி, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமாக இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலைக்கும் நுகர்வோர் செலுத்தும் விலைக்கும் இடையிலான நீண்டகால இடைவெளியை குறைப்பதில் இத்தகைய நேரடி சந்தைப்படுத்தல் வலையமைப்புகள் முக்கிய பங்காற்றும் எனவும் விவசாயத் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனுடன் இணைந்து புதிய பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கமொன்றையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஒழுங்குமுறை மற்றும் நியாயமான வர்த்தக அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நுவரெலியா மாவட்ட சிறு தொழில் அபிவிருத்திப் பணிப்பாளர் நந்தன பண்டார, இந்த புதிய மொத்த மரக்கறி கொள்வனவு நிலையம் நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கும் புதிய தொழில் முனைவோருக்கும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமையும் என்றார்.
புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்கு வலுசேர்க்கும் இந்தத் திட்டம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதும், இடைத்தரகர்களிடம் குவியும் இலாபத்தின் பெரும்பகுதியை விவசாயிகளுக்கே திருப்பி வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
“ஆரம்பம் முதலே வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நியாயமான வர்த்தக முறையை நடைமுறைப்படுத்த முடிந்தால், விவசாயிகள் நீண்டகால அடிப்படையில் இந்த முயற்சியுடன் இணைந்து செயல்படுவார்கள். இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிப்பதுடன், உள்நாட்டு விவசாய உற்பத்திச் சந்தையும் மேலும் வலுப்பெறும்,” என நந்தன பண்டார தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுவரெலியா விவசாயிகள் கூட்டமைப்பின் மற்றும் தேசிய விவசாயிகள் குரல் அமைப்பின் தலைவர் தரிந்து ரத்நாயக்கவும், நுவரெலியா அமைப்பின் செயலாளர் ஹசித வீரசிங்கவும், விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்தக்கூடிய வணிக வலையமைப்பை உருவாக்குவதே இந்த முன்னோடி திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.
விவசாயிகள் நிறுவனத்தின் ஊடாக நுகர்வோருக்கு நேரடியாக மரக்கறிகளை விநியோகிக்கும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இடைத்தரகர்களின் இலாபத்தின் பெரும்பகுதி விவசாயிகளுக்குச் செல்லும் வகையிலும், நுகர்வோருக்கு தரமான மரக்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையிலும் நிலையான வர்த்தக முறைமை உருவாக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக நுவரெலியா பொருளாதார மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுடனும் இணைத்து தேசிய அளவிலான விவசாய வர்த்தக வலையமைப்பாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகள் நிறுவனத்தின் ஊடாக சந்தைக்கு அனுப்பப்படும் மரக்கறிகள் நுகர்வோரால் எளிதில் அடையாளம் காணப்படும்வகையில் வர்த்தக முத்திரையுடன் (Branding) அறிமுகப்படுத்தப்பட்டு, தரமான, நம்பகமான மற்றும் உயர்தர சேவையை வழங்குவதே தங்களது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

