லொக்ஹில் தோட்டத்தில் மர ஆலை அமைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபை அனுமதி வழங்காது
- மாதாந்த அமர்வில் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு கொட்டகலை லொக்ஹில் தோட்டத்தில் மர ஆலை அமைப்பதற்கு கடந்த வாரம் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவ்வாறு ஆலை ஒன்றை அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி எதனையும் வழங்கியிருக்கவில்லை. அதேநேரம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு பிரதேச சபை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்காது என கொட்டகலை பிரதேஷ் சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேற்படி சபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பிரதேச சபைக்கு வாக்களித்து உறுப்பினர்கள் தெரிவு செய்யபப்ட்டுள்ளார்கள். எனவே, அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் கூடுதலான கவனம் எடுத்து செயற்பட வேண்டியது எமது பொறுப்பும் கடமையும் ஆகும். அந்த வகையில் லொக்ஹில் தோட்டத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் மர ஆலை நிறுவ தோட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. தோட்டத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த போது வீடமைப்புக்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தை அண்மித்து தற்போது 25 குடும்பங்கள் வசித்து வருவதாவும், எனவே, அந்த இடத்தை ஆலையொன்றை அமைப்பதற்கு வழங்கக் கூடாது என்று தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தலைவர் என்ற முறையில் நானும், உபதலைவர் யாகுலமேரி ஜேசுதாசன் மற்றும் உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டோம். அதனால், மக்கள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எமது பிரதேச சபை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்துக்கோ தோட்ட நிர்வாகத்துக்கோ அல்லது தனி நபருக்கோ என்றும் துணை போகாது. நாம் மக்களுடனேயே இருப்போம். அதேநேரம், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பூரண ஆதரவை தருவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
கொட்டகலை பிரதேசதில் பிறந்து வளர்ந்து வசதி படைத்த பரோபகார குணம் படைத்த ஒருவர் இங்குள்ள சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை நவீனமயமாக்கி, மேடை அமைத்து தமது சொந்த செலவில் சகல வசதிகளுடனும் சுமார் 70 இலட்ச ரூபாவுக்கு மேல் செலவு செய்து அமைத்து, பிரதேச சபைக்கு கையளிக்க முன்வந்துள்ளார். இதற்கான மேலதிக காணியைப் பெற்றுக் கொள்வதற்கு தோட்ட முகாமையாளர், சகல தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள், மற்றும் பொது மக்களதும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. பிரதேச சபை உறுபினர்கள் தமது ஆதரவை வழங்கி பிரம்மாணடமான மைதானத்தை அமைத்து பிரதேசத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு முயற்சிகளை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்றார்.
மேற்படி சபை அமர்வின் போது, 2018 முதல் பிரதேச சபையில் செயலாளராக இருந்து ஓய்வு பெறவுள்ள எஸ். விஜசுந்தரத்தின் சேவையை உறுப்பினர்கள் பாராட்டிப் பேசியதோடு, மஸ்கெலியா பிரதேச சபையிலிருந்து இடமாற்றம் பெற்று வந்துள்ள புதிய செயலாளர் எஸ். ராஜவீரனுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

