வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய தீர்த்த படிக்கட்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் மரபுவழிக் கங்காணம் கங்கை தீர்த்த படிக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சமூக ஆர்வலர் திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவரும், பிளாட்டினம் நிறுவனக் குழுமத்தின் தலைவருமான குமார் ஜெயகுமாரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அமைப்பதற்கான பணிகளை முறைப்படி ஆரம்பித்து வைப்பதற்கான அடிக்கலினை நாட்டி வைத்தார்.
பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருந்து வந்த, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் கங்கை தீர்த்த படிக்கட்டினை அமைப்பதற்கான ஒரு தீர்வினை வழங்கும் நோக்கில் இதற்கு பங்களிக்க முடிந்ததை எண்ணி எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்று திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவரும், பிளாட்டினம் நிறுவனக் குழுமத்தின் தலைவருமான குமார் ஜெயகுமாரன் தெரிவித்தார்.
இது வெறும் கட்டுமானப் பணியாக மட்டும் இல்லாமல், எமது ஆன்மீக மரபையும், முன்னோர்களின் அடையாளங்களையும் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத் தளமாக நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறினார்.
எமது இந்து சமய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையிலேயே இந்தப் பணியை முன்னெடுக்க நான் முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய கோயில் நிர்வாகத்தினருக்கும், ஆதரவு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், எமது மக்களின் நலனுக்காகவும், எமது சமய, கலாசார, வரலாற்று மரபுகளைப் பேணிப் பாதுகாக்கவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றார்.
பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இழுபறியில் இருந்து வந்த இந்த முக்கியமான கோரிக்கைக்கு, தற்போது தீர்வு காணப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

