குச்சவெளியில் பெருமளவிலான மரக்கடத்தல் முறியடிப்பு!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை தனன்பரிச்சான் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கடத்தவிருந்த பெருமளவிலான மரக்குற்றிகளை குச்சவெளி மற்றும் நிலாவெளி பொலிஸார் இணைந்து இன்று காலை அதிரடியாக முறியடித்துள்ளனர்.
புல்மோட்டை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வனப்பகுதியில் இருந்து பெறுமதிமிக்க மரங்களை லாரி மற்றும் கார் ஒன்றில் ஏற்றிக் கடத்த முயன்ற போதே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
தப்பியோட்டம்: சம்பவ இடத்தில் இருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரைக் கண்டதும் மூவர் தப்பியோடியுள்ளனர்.
குச்சவெளி, நாவச்சோலை மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரின் உதவியுடன், வெட்டப்பட்ட மரங்களை முல்லைத்தீவுக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி மற்றும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் (Rent a car) ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை தப்பியோடிய ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான தீவிர தேடுதலில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

