கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்!

கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்!

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திற்கு நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ள நிலையிலும், தமிழ் – முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமான ஒரு தீர்வை எட்ட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கிக் கொண்டு சில கருத்துக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கூறியுள்ளார். தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகைப் பெறவேண்டும் என்பது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாகச் செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன்.

இதேநேரம், கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதான்சன், என்மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டப்படுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டையும் அவர் சுமத்தியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்த் தரப்பிலிருந்து ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும், முஸ்லிம் தரப்பிலிருந்து ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் நான் உள்ளிட்ட அரசியல், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம். அந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதற்கு அங்கு வந்திருந்த அனைவரும் சாட்சியாக உள்ளனர். என்னால் அங்கு எதுவும் நடக்கவில்லை.

அதன்பின்னர், ஈஸ்டர் தாக்குதலின் பின் கல்முனையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் சம்பந்தன் ஐயா தலைமையில் சுமந்திரன், மாவை, கோடீஸ்வரன் ஆகியோருடன், முஸ்லிம் தரப்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், நிஸாம் காரியப்பர் மற்றும் நாங்களும் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை. அங்கு என்னால்தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது.

வெறுமனே தமிழ் – முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற பிரதிநிதிகளை நாங்கள் பொதுவெளியில் ‘இனவாதிகள்’ என்று என்றுமே கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயம் என்ற புரிந்துணர்வு எங்களுக்கு உண்டு. ஆனால் எடுத்தவுடன் எங்களை நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையானது.

குறிப்பாக நான் தமிழ் மக்களை நோக்கி ‘புலிச்சாயம்’ பூசியதாக முன்னாள் எம்.பி கலையரசன் கூறியிருப்பது அப்பட்டமான பொய்யாகும். நான் இரு தரப்பு சிவில் சமூகங்களையும் பேச்சுவார்த்தைக்கே அழைத்திருந்தேன்.

இதுவரை நான் குறுக்கே நின்றேன் என்று சொல்வதால், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, குறிப்பாக தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான தமிழ் தரப்பு குழுவும், முஸ்லிம் தரப்பில் கல்முனை தொகுதி பிரதிநிதி நிஸாம் காரியப்பர் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களை வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அல்லது நேரடியாக கல்முனை தமிழ் சிவில் சமூகமும் (கோயில் தர்மகர்த்தாக்கள், புத்திஜீவிகள்) கல்முனை முஸ்லிம் சிவில் சமூகமும் (பள்ளிவாசல் பிரதிநிதிகள், புத்திஜீவிகள்) இணைந்து நிரந்தர தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.

என் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன். கல்முனை நகரில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு நிருவாகச் சிக்கல் இருப்பது வெளிப்படையான உண்மை. இதனை கவனத்தில் கொண்டே, தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்காக இலங்கை தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரனுக்கு நல்லெண்ண அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்தேன். இரு சமூகங்களினதும் சமாதானத்தையும் தீர்வையும் விரும்புவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

manel