ஊவா மாகாணத்தில் 2,50,000 மக்கள் பங்கேற்ற மாபெரும் சிரமதானம்

ஊவா மாகாணத்தில் 2,50,000 மக்கள் பங்கேற்ற மாபெரும் சிரமதானம்

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05) ஊவா மாகாணத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிரமதானத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசேட வேலைத்திட்டமானது ‘Clean Sri Lanka’ செயலகம், ஊவா மாகாண சபை, பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட ஊவா மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்திருந்தன.

மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதானத் திட்டங்கள் ‘பிரஜாசக்தி அபிவிருத்திக் குழுக்கள்’ ஊடாக அடிமட்ட அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.

இன்றைய தினம் ஊவா மாகாணம் முழுவதும் தலா 2,500 இற்கு நெருக்கமான சிரமதான வேலைத்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன. இம்மாபெரும் தூய்மையாக்கல் பணி இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டது.

பதுளை மாவட்டத்திற்கான பிரதான வேலைத்திட்டம் இன்று காலை 8.00 மணிக்கு பதுளை புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மாபெரும் சிரமதானப் பணிக்காக மாகாணத்தின் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 2,50,000 இற்கும் அதிகமான மக்கள் தங்களது உழைப்பைப் பங்களிப்பாக வழங்கியுள்ளனர்.

இது இலங்கை வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விசேட தினமாக அமைந்ததோடு, மக்கள் தங்களின் உழைப்பைத் தானமாக வழங்கியதன் மூலம் பெருமளவிலான பொதுப் பணம் சேமிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் மதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

manel