“அர்ஹமின் சாதனைச் சிட்டுக்கள்” கௌரவிப்பு!
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தின் “அர்ஹமின் சாதனைச் சிட்டுக்கள்” கௌரவிப்பு விழா பாடசாலை அதிபர் எஸ்.எம்.ஸாகிர் ஹுஸைன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், மீலாத் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்மாதம் ஓய்வுநிலையை அடையவுள்ள அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச்.பௌஸ், பி.ஜிஹானா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாயிஸ் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

