குழந்தை இதய அறுவை சிகிச்சை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவின் அமிர்தா மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 50 இலங்கை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்திற்கும் மேற்கு கொழும்பு ரோட்டரி கிளப்பிற்கும் இடையே கையெழுத்தானது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கே மற்றும் மேற்கு கொழும்பு ரோட்டரி கிளப்பின் தலைவர் கே.பி. நாகராஜா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரோட்டரி குளோபல் திட்டத்தின் மூலம் கொழும்பு மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் கொச்சி மேற்கு ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து இதற்கான நிதியை வழங்கவுள்ளன. நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் (waiting list ) உள்ளனர். மேலும் நாட்டில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் காணப்பட்டபோதிலும், அவசர இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கபடுகின்றது.

