600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டு 36ஆம் ஆண்டு நிறைவஞ்சலி!
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சுமார் 600 பொலிஸ் உத்தியோகத்தர்களின் 36ஆவது ஆண்டு நிறைவு நினைவு தினம் (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள ‘ரணவிரு’ ஞாபகார்த்த நினைவுத் தூபியருகில் அனுஷ்டிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மேற்படி பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக, அமைதியை வலியுறுத்தி இந்த மலர் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவினால் பொலிஸ் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், உயிர்நீத்த உத்தியோகத்தர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, 1990ஆம் ஆண்டு கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பொலிஸார் உட்பட, கடந்த கால யுத்தம் மற்றும் இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களின் நலன்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட விடுதலைப் புலிகள், அங்கிருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆயுதங்களுடன் கடத்திச் சென்றனர். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ்குளம் காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, பொலிஸ் உயரதிகாரிகள், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

