ரூ. 45.4 கோடி பெறுமதியான கொக்கைன், போதை மாத்திரைகள் உடன் இந்தியப் பிரஜை கைது!
சுமார் ரூ. 454 மில்லியன் (ரூ 45.4 கோடி) தெரு மதிப்புடைய கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சி ஹேவா தெரிவித்தார்
பொறியியலாளரான இச்சந்தேகநபர், கட்டார் ஏயர்வேஸ் சேவையின் QR 654 இலக்க விமானம் மூலம் பரிஸ் நகரிலிருந்து டோஹா வழியாக இலங்கைக்கு வருகை தந்த நிலையில், விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளால் மேலதிக சோதனைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.
இதன்போது, 5,121 கிராம் (5.12 கி.கி) கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் தெரு பெறுமதி ரூ. 256 மில்லியன் (ரூ. 25.6 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 13,173 கிராம் (13.17 கி.கி) சுமார் 23,000 போதை மாத்திரைகள் இதன் போது மீட்கப்பட்டுள்ளது. இதன் தெரு மதிப்பு ரூ. 198 மில்லியன் (ரூ. 19.8 கோடி) என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி ரூ. 454,000,000 (ரூ. 45.4 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி மற்றும் ஏனைய சான்றாதாரப் பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

