தொண்டமானின் நினைவு நாளில் இ.தொ.கவில் இணைந்த அ. நந்தகுமார்!
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தற்போதைய ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினருமான அழகமுத்து நந்தகுமார், இன்று (30) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு சௌமிய பவனில் இன்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்து கொண்டார்.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் அமைச்சரான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் காலப்பகுதியில் ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் தலைவராகப் பதவி வகித்த அழகமுத்து நந்தகுமார், கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து விலகி மற்றுமொரு அமைப்பில் இணைந்த அவர், பின்னர் மீண்டும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் எவ்வித அறிவிப்பும் விடுக்காமல், தற்போது மீண்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

