நுவரெலியாவில் விபத்து : நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்ட பாரிய அசம்பாவிதம்!
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொப் பாஸ் தோட்டப் பகுதியில் கொள்கலன் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி மாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பாரிய வளைவொன்றில் பயணித்த கொள்கலன் லொறி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்த நிலையில் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொள்கலன் லொறியின் பிரேக் கட்டமைப்பு உரிய முறையில் செயற்பட்டதன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பிரேக் கட்டமைப்பு செயற்படத் தவறியிருந்தால், பல உயிர்களைப் பலிகொள்ளக்கூடிய பாரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த விபத்து இடம்பெற்ற விதம், சம்பவத்தின் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டாஷ் கெமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது.
ஆபத்தான வளைவுகள் நிறைந்த நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அதிக அவதானத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

