யோஷிதவிற்கு எதிரான வழக்கின் பூர்வாங்க விசாரணைக்கு திகதி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் (Daisy Forrest) ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கின் பூர்வாங்க அமர்விற்காக, ஓகஸ்ட் 31ஆம் திகதி அன்று அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சுமார் ரூ. 59 மில்லியன் பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் ஊடாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரினால் இந்த இரு பிரதிவாதிகளுக்கும் எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

