மில்லனிய பிரதேச சபை தவிசாளருக்கு மரண அச்சுறுத்தல்
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கொண்டுள்ள மில்லனிய பிரதேச சபையின் தவிசாளர் ஜயதுங்க கமகே சமன் சுஜீவவுக்கு, அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பு மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) அதிகாலை 1 மணியளவில் நபர் ஒருவர் தவிசாளரின் கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு, ‘விடிவதற்குள் கொலை செய்துவிடுவதாக’ அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, தவிசாளர் உடனடியாகப் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஹொரணை தலைமையகப் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்குச் சென்று முறைப்பாட்டை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மரண அச்சுறுத்தல் விடுத்த நபரின் அடையாளத்தைக் கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் அழைப்புப் பதிவுகள் குறித்துத் தொழில்நுட்ப விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவிசாளரின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

