மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!
கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார்; அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு 10,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க வேண்டும்,” என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் எந்த அரசும் முன்னெடுக்காத, இயற்கை அனர்த்தம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளார்.
அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பானதொரு பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பல வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால், அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான சூழல் உருவாகும்.
வெள்ளம் வடிந்தோடும் காலகட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழ்நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி, வாகரை போன்ற பிரதேசங்களில் சில இடங்கள் இவ்வாறு உள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தையடுத்து, சுமார் 25-26க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்துள்ளன.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் சுனாமியின் போது விட்ட பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. சுனாமிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டதன் ஊடாகப் போக்குவரத்து மிகவும் இலகுவானது. ஆனால், இன்னும் மேலதிகமாகப் பல பாலங்களை அமைப்பதற்கு நாம் திட்டங்களை முன்வைத்திருந்தால், அவற்றையும் அமைத்திருக்க முடியும் என்றார்.

