போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 7 சாரதிகள் அடையாளம்!
போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் திடீர் பரிசோதனை நடவடிக்கை நேற்று (01) பிலியந்தல பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட 252 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கே. ஜோசப் தலைமையிலான குழுவினர் இந்தப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் நடமாடும் பரிசோதனை ஆய்வக பேருந்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் வீதி ஒழுக்கம் பாதிக்கப்படுவதற்கான காரணிகளை கருத்திற்கொண்டு, போதைப்பொருள் பாவனையற்றதும் ஒழுக்கமானதுமான சாரதிகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்தப் பரிசோதனை நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பரிசோதனைகளில் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்படும் சாரதிகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விதிமுறைகளின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதுடன், நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீதி விபத்துகளை குறைத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

