பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது!

பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது!

கிராமம், நகரம் மற்றும் பெருந்தோட்டம் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி உள்ளூராட்சி மன்றத்தின் சேவைகள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் கபில நாகந்தல தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
மயான மண்டப கோரிக்கை குறித்த விளக்கம்
“பெருந்தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள பொது மயானங்களில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்காகச் சிறு மண்டபங்களை அமைத்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை, நிலம் பிரதேச சபைக்குச் சொந்தமானதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதே பிரதேச சபை நிதியைக் கொண்டு தோட்டப் பகுதிகளில் பாதைகள், படிக்கட்டுகள் மற்றும் குடிநீர்த் திட்டங்களைச் சீரமைக்க முடியும் என்றால், பொது மயானங்களில் சிறு மண்டபங்களை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2018ஆம் ஆண்டின் பிரதேச சபை திருத்தச் சட்டத்தின்படி தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதால், இப் பிரச்சினை குறித்து உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்கள் பிரதிநிதியாகத் தொகுதி மக்களுக்கு உரிய சேவைகளை முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டியது தனது கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிவாரணக் கொடுப்பனவு முறைகேடுகள் மீதான விசாரணை

தொடர்ந்து உரையாற்றிய அவர், நுவரெலியா மாவட்டத்தில் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம் மற்றும் அண்மைய இயற்கை அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துக் கவலை வெளியிட்டார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுல சுரவீர முன்னெடுத்து வரும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளைக் சுட்டிக்காட்டிய அவர், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும் அஸ்வெசும பயனாளிகள் தேர்வு மற்றும் அனர்த்த நிவாரண நிதிப் பங்கீட்டில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

manel