பெரகல – வெல்லவாய பிரதான வீதி இருவழிப் பாதையாக நவீனமயமாக்கம்
இலங்கையின் மிக முக்கியமான பிரதான வீதிகளில் ஒன்றான ஏ-4 (A4) வீதியின் பெரகல – வெல்லவாய (Beragala – Wellawaya) வீதிப் பகுதி ஐந்து கட்டங்களாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றது. இதன் 3ஆம் கட்டப் பணிகள் நேற்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ், “மறுமலர்ச்சிக்கான பாதை” (පුනරුදයට මඟ) எனும் திட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமல் மிக மோசமான நிலையில் காணப்பட்ட இவ்வீதியால், பிரதேச மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் எதிர்கொண்டு வந்த போக்குவரத்து அசௌகரியங்களுக்கு இதன் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படவுள்ளது.
ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு: போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொத்தம் ரூ. 2,380 மில்லியன் (ரூபாய் 238 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட 3ஆம் கட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக மாத்திரம் ரூ. 322 மில்லியன் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த அபிவிருத்தித் திட்டத்தையும் ஐந்து கட்டங்களின் கீழ் ஓராண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதன் பணிகள் அனைத்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

