பாராளுமன்றம் ஜூன் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூன் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. 

பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமைய 2026 ஜூன் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. 

இதனையடுத்து, பி.ப 5.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது. (இதன்போது விவாதம் நடத்தப்படாது) 

இதன் பின்னர் பி.ப 5.00 மணிமுதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

2026 ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதமும், அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

2026 ஜூன் மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

2026 ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் 2478/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அன்றையதிம் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு 25.05.2026ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சிக்காக நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

manel