நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்று நாள் விசேட கண்புரை சத்திரசிகிச்சை முகாமின் இரண்டாவது நாளான இன்று (22), சுமார் 300 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன், ஜனாதிபதி நிதியத்தின் நிதி அனுசரணையில் இந்த விசேட மருத்துவ முகாம் முன்னெடுக்கப்படுகிறது.
நுவரெலியா புதிய மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வை. எம். எஸ். எஸ். யாப்பா தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மற்றும் முன்னாள் வைத்தியசாலைப் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் இவ்வாறான சமூக நல மருத்துவ சேவைகளின் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நீண்டகாலமாக கண்புரை சத்திரசிகிச்சைக்காகக் காத்திருந்த நோயாளர்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 500 முதல் 600 பேருக்கு மூன்று நாட்களுக்குள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களின் பார்வையை மீட்டெடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

