நிலாவெளி பொதுக் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்.

நிலாவெளி பொதுக் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்.

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிலாவெளி பொதுக் கடற்கரையில் கழிவுகள் முறையான வகையில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால், அங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று (07) நிலாவெளி கடற்கரைக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும், இந்தத் துர்நாற்றம் காரணமாகப் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதுடன், முகத்தைச் சுழித்தபடி அங்கிருந்து வெளியேறியதைக் காணக்கூடியதாக இருந்தது என அப்பகுதியில் சுற்றுலாத்துறையை நம்பி வாழும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பாதிப்புகளும்நிலாவெளி உப பிரதேச சபைக்குட்பட்ட இந்தப் பகுதியானது, நாளாந்தம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமானதொரு கடற்கரையாகும்.

இவ்வாறானதொரு சூழலில் கழிவுகள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமல் பொதுக் கடற்கரையிலேயே வீசப்பட்டுள்ளமை, அகற்றப்படாமல் அழுகித் துர்நாற்றம் வீசுவது, சுற்றுலாத்துறையையும், அதன் அழகையும் பெருமளவில் பாதிப்படையச் செய்துள்ளது.

பிரதேச சபைச் செயலாளரின் கவனத்திற்கு நிலாவெளி கடற்கரையின் தூய்மையீனம் மற்றும் துர்நாற்றம் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாத் தொழில்புரிவோர் குச்சவெளி பிரதேச சபைச் செயலாளரின் அவசர கவனத்திற்கு இதனைக் கொண்டுவருகின்றனர்.

சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு சுற்றுலாத் தலத்தில் இவ்வாறான அவல நிலை தொடர்வது அழகல்ல என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தேங்கிக் கிடக்கும் கழிவகற்றி கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

manel