நிலாவெளி சுற்றுலாத் தளத்தில் நிருவாகச் சீர்கேடு; வெளிநாட்டு பயணிகள் கடும் அதிருப்தி!

நிலாவெளி சுற்றுலாத் தளத்தில் நிருவாகச் சீர்கேடு; வெளிநாட்டு பயணிகள் கடும் அதிருப்தி!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக இருக்கின்ற திருகோணமலை – நிலாவெளி மற்றும் புறாத்தீவு போன்ற பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற நிருவாகக் கட்டமைப்பு காரணமாகக் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

​கடந்த 31 ஆம் திகதி விசாக் பௌர்ணமி தின விடுமுறையை முன்னிட்டு, நாட்டின் பல பாகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிலாவெளி கடற்கரைப் பகுதிக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும், அங்குள்ள வனஜீவராசிகள் திணைக்கள அலுவலக நிருவாகச் செயற்பாடுகள் மந்தகதியில் இயங்கிவருவதால் சுற்றுலாப் பயணிகள் பல மணித்தியாலங்கள் நீண்டநேர வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில், கடல்சார் தேசிய பூங்காவான புறாத்தீவுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்குப் போதியளவு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படாமையே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமென்றும், மிக நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைமையும் தோன்றியுள்ளதாக
சுற்றுலாப் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக, வெயிலில் மிக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பல குடும்பங்கள், புறாத்தீவுக்குச் செல்லாமலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால், ​அரசுக்கு கிடைக்கின்ற வருமான இழப்பும் இல்லாமல் போகின்றது.

​இது குறித்து குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்தவோ அல்லது மேலதிகப் பணியாளர்களை நியமிக்கவோ எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும்
​இப்பகுதியில் வாழும் மக்கள் சுற்றுலாத்துறையை மாத்திரமே தங்களின் முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, அப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிலைமையையும் அரசாங்கத்திற்குப் பெருமளவு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நிலாவெளி புறாத்தீவுக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கும் அலுவலக செயற்பாடுகளையும் உடனடியாக சீரமைக்கும் நடவடிக்கையினை கிழக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாத்துறை தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூடிய கவனமெடுத்து செயற்படவேண்டும்.

manel