செட்டியார் தெருவில் கடையுடைத்து நகை திருடிய நபர் கைது
புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள நகைக் கடையொன்றைத் தன்னந்தனியனாக உடைத்துக்கொள்ளையிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகிய நபர் ஒருவரைப் பேலியாகொமைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர் போதைப் பொருள் வாங்குவதற்காக இதற்கு முன்பு தனது சிறுநீரகமொன்றை விற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அந்த விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தங்க ஆபரணங்களில் ஒரு பவுண் (Pawn) எடையுள்ள ஆபரணங்களையும், சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்களையும் பொரளை சிறிசெத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் மறைத்து வைத்திருந்ததாகச் சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டெடுத்தனர்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு, சந்தேகநபர் இரண்டு மாடிகளைக் கொண்ட விற்பனை நிலையக் கட்டிடத்தின் மேல் மாடியின் கூரையின் வழியாக நுழைந்து இந்தக் கொள்ளையைச் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்துப் பேலியகொடை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், இந்தக் கொள்ளைச் சம்பவம் ஒரு தனிநபராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இதன்போது கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுவட்டார CCTV கெமராக்கள் ஊடாக 5 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக, சந்தேகநபர் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது.
அதன் சாரதியிடம் விசாரித்தபோது, சந்தேகநபர் மாளிகாவத்தை பிரதேசத்தில் இறங்கிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு சந்தேகநபர் மற்றொருவருடன் கம்பளை, புபுரஸ்ஸ, பன்விலத்தென்ன பகுதிக்குச் சென்றுள்ளதாகப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேகநபரை கைது செய்துள்ளது.
சந்தேகநபர் திருடிய தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொடுத்து ‘ஐஸ்’ மற்றும் போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்து பாவித்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

