சுயாதீனமான சேவைக்குத் திறமையான அதிகாரிகள்
சுயாதீனமான சேவைக்குத் திறமையான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உகந்த சேவையை வழங்கும், சுயாதீனமான, திறமையான அரச சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
மக்களுக்காக அர்ப்பணிப்புமிக்க திறமையான அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முகாமைத்துவ சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் தெரிவாகி நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1890 பேருக்கு இன்று நியமனம் வழங்கப்பட்டது.
நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) அலரி மாளிகையில் நடைபெற்றபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர்,
“நீங்கள் இன்று இந்த நாட்டில் இருந்து வந்த சம்பிரதாய அரச சேவையில் இணையவில்லை என்பதை நான் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
இத்தனை காலமும் இருந்து வந்த வினைத்திறனற்ற, அரசியல் பக்கச் சார்பான அரச சேவைக்குள் நீங்கள் இன்று இணையவில்லை. மாறாக மக்களுக்காகச் செயல்படும், சுயாதீனமான அரச சேவையிலேயே இணைந்துகொள்கிறீர்கள்.
2020 நவம்பரில் இதற்கான பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அரச சேவையில் திறந்த ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதால், இந்தப் போட்டிப் பரீட்சையை 4 வருடங்களின் பின்னரே நடத்த நேர்ந்தது.
இதனால் அரச சேவையில் ஐயாயிரம் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
இப்பரீட்சையும், 2,223 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு அமையவே நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே, இன்று 1890 புதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நீங்கள் அரச சேவையில் இணைந்து கொள்கிறீர்கள்.
இந்த ஆட்சேர்ப்பு, 2020ஆம் ஆண்டு இலங்கையின் மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு அமைய நடைபெறுகிறது.
எழுத்துப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் திறமை வரிசை துல்லியமாகப் பின்பற்றப்பட்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அது மிகுந்த வெளிப்படைத்தன்மைமிக்க விதத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
அத்தோடு, எஞ்சியிருக்கும் தகுதி பெற்ற ஏனைய விண்ணப்பதாரர்களையும் ஆட்சேர்ப்பில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பிரதாய அரச சேவைக்குப் பதிலாக திறமையான, சுதந்திரமான அரச சேவையை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.
குறிப்பாக, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அரச சேவை மூலம் மக்களுக்கு மிக விரைவாகச் சேவைகளை வழங்குவதும், மக்களுக்காக உணர்வுபூர்வமான அரச சேவையை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இன்று அரச உத்தியோகத்தர்களுக்குச் சுயாதீனமான செயற்பட வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. எமது அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் அரச சேவையில் தலையிட மாட்டார்கள்.
ஆனால், சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அந்தச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதாக எமக்கு அறியக் கிடைத்திருக்கின்றது.
மோசடி, ஊழல், அநீதி ஆகியவை நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான முறையில் பரவியிருந்ததாலேயே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்தார்கள்.
ஆகையினால் இதற்கு மேலும் எந்தவொரு சேவையிலும் அநீதி, மோசடி, ஊழல் இடம்பெறக்கூடாது. எதிர்காலத்தில் சுயாதீனமான சேவைக்குத் திறமையான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்
அவ்வாறான சந்தர்ப்பங்கள் பற்றி எமக்கு அறியக் கிடைப்பின், அரசாங்கம் என்ற வகையில் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கே நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

