கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமனம்!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோர கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மாகாணத்தின் காணிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக ‘கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்’ என்னும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் அலகு ஒன்றையும் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சமூக அமைப்பைக் கருத்திற்கொண்டும், அனைத்துச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும், இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளுடன், விடயம் தொடர்பான அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த விசேட குழுவுக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசேட குழுவுக்கு தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சேனக பல்லியகுருகே குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக அம்பாறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்
பி.வி. கஸ்தூரியாரச்சி, கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளார் ஏ.டி.எம். ராபி, வடக்கு, கிழக்கு மாகாண வனப்பாதுகாப்பு திணைக்கள பிரதி வனப்பாதுகாவலர் வசந்த லியனகே, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் செல்வி ஹெஷானி சோமரத்ன, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்கள சட்ட அதிகாரி திருமதி பஞ்சாலி பெர்னாண்டோ,
அம்பாறை, மட்டக்களப்பு தொல்பொருள் திணைக்கள பிராந்திய உதவிப் பணிப்பாளர் அனுஷன் முனசிங்க, இலங்கை மகாவலி அதிகாரசபை வதிவிட நிறுவன மேலாளர் ஐ.எம்.உபயகல்யாண, அம்பாறை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பிராந்திய உதவிப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், அம்பாறை அளவைத் திணைக்கள சிரேஷ்ட அளவை அத்தியாட்சகர் ஜி.ஆர்.எல். பெரேரா, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முகாமையாளர் எம்.எச்.எம். மாஹீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

