கம்பஹா நீதவானுக்கு உடனடி இடமாற்றம்!
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவரை நீதிபதிகள் பயிற்சி நிறுவகத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசருக்கு நீதவான் பந்துல குணரத்ன முறைப்பாடு ஒன்றை அனுப்பியிருந்தார்.
நிரபராதியான குடிமக்களுக்கு எதிராக வீணாக வழக்குத் தொடர வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் புறக்கணித்துச் செயற்பட்டதன் மூலம், அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் சுட்டிக்காட்டியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கம்பஹா பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் போதைப்பொருள் வைத்திருந்ததாகப் போலிச் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, ஒரே நாளில் ஒரே சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது, ஒரே சந்தேகநபருக்கு எதிராக ஒரே குற்றச்சாட்டின் கீழ் ஒரே நாளில் இரண்டு வழக்குகள் ஏன் தாக்கல் செய்யப்பட்டன என நீதவான் வினவியபோது, அது ஒரு தவறு என்றும் ஒரு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிரபராதி மக்களுக்கு எதிராக வீணாக வழக்குத் தொடர வேண்டாம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த நீதவான், சந்தேகநபருக்கு இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.அத்துடன், சட்டவிரோதமான முறையில் வழக்குத் தொடர வேண்டாம் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதவான் பந்துல குணரத்தினவிடம் விளக்கமளிக்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது.
இதற்கமைய, நீதவான் பந்துல குணரத்தின சமர்ப்பித்த அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைத் தொடர்ந்து, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் இந்த இடமாற்றக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
