கப்துரு சவிய” திட்டம்: பதுளை, ஹாலி-எல பகுதி மக்களுக்கு 3,000 இலவச தென்னங்கன்றுகள் விநியோகம்!

கப்துரு சவிய” திட்டம்: பதுளை, ஹாலி-எல பகுதி மக்களுக்கு 3,000 இலவச தென்னங்கன்றுகள் விநியோகம்!

வீட்டுத் தோட்டத் தெங்குச் செய்கையைப் பிரபல்யப்படுத்தி தேசிய தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “கப்துரு சவிய” தேசியத் திட்டத்தின் கீழ், பதுளை மற்றும் ஹாலி-எல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்காக 3,000 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான தென்னை செய்கைச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்தேசியத் திட்டத்தின் கீழ், வீட்டுத் தோட்டத் தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை பிரதேச மக்களுக்காக 1,250 தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (07) வீல்ஸ்பார்க் விளையாட்டு மைதானத்தில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், ஹாலி-எல பிரதேச மக்களுக்காக 1,750 தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (08) ஹாலி-எல பிரதேச செயலகத்தில், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு மட்டத்தில் தெங்குச் செய்கையை விரிவுபடுத்துவதும், மக்களைத் தமது வீட்டுத் தோட்டங்களில் தெங்குச் செய்கையை மேற்கொள்ள ஊக்குவிப்பதும், அதன் ஊடாக தேசிய தெங்கு உற்பத்தியை உயர்த்துவதற்கு பங்களிப்புச் செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

அத்துடன், 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் தேங்காய்களாக அதிகரிப்பதும், தெங்கு சார்ந்த ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக வளர்ப்பதும் அரசாங்கத்தின் பிரதான தேசிய இலக்குகளில் அடங்குவதோடு, அந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காகவே இவ்வாறான திட்டங்கள் ஊடாக வீட்டுத் தோட்டத் தெங்குச் செய்கை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வுகளில் பதுளை மாநகரசபையின் மேயர் நந்தன ஹப்புகொட, பதுளை பிரதேச சபையின் தலைவர் பாலித ஜயவர்தன, ஹாலி-எல பிரதேச சபையின் தலைவர் பிரியந்த வருஷமான்ன, தென்னை செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருமளவிலான பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

manel