ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை முறைகேடாக பயன்படுத்த இடமில்லை

ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை முறைகேடாக பயன்படுத்த இடமில்லை

ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் அவற்றின் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும் வகையில் நிர்வகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தைப் போன்று இந்த நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொழில் செயலகத்தில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் இருந்த தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டப்பட்ட 11ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

தொடர்புடைய நிதியங்கள் தற்போது நிலைத்தன்மையான நிலையை அடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய, முறையான நிர்வாக மற்றும் முகாமைத்துவ முறைமைகளின் ஊடாக இந்த நிதியங்களை மேலும் திறமையானதும் பயனுள்ளதுமான முறையில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இது தொடர்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவுக்கு சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கங்கள் இந்த இரண்டு நிதியங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியமையே இந்த எதிர்ப்புக் காரணம் என மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொது நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், எந்தவொரு முன்மொழிவு தொடர்பான இறுதித் தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

manel