ஆசிய தூதுவர்களுடன் உயர் மட்டக் கலந்தரையாடல்!

ஆசிய தூதுவர்களுடன் உயர் மட்டக் கலந்தரையாடல்!

திருகோணமலை மாவட்டத்தை சர்வதேச முதலீட்டு வரைபடத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பங்கேற்ற உயர் மட்டக் கலந்தரையாடல் (09) திருகோணமலை பீச் ரிசோர்ட் அன்ட் ஸ்பாவில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் ஏற்பாட்டில், “எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவரும், பிளாட்டினம் குறூப் ஒப் கம்பனிகளின் (Platinum Group of Companies) தலைவருமான குமார் ஜெயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த உயர்மட்ட நிகழ்வில் மலேசியா, இந்தோநேசியா, தாய்லாந்து, மியன்மார், வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் இராஜதந்திரப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முன்னணி தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்தரையாடலின்போது திருகோணமலையின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் சர்வதேச முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவரும், பிளாட்டினம் குறூப் ஒப் கம்பனிகளின் (Platinum Group of Companies) தலைவருமான குமார் ஜெயகுமாரன் அங்கு உரையாற்றுகையில்,

சுற்றுலா, துறைமுகம், சேவைகள், உற்பத்தி மற்றும் சர்வதேச முதலீட்டு மையமாக தெற்காசியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக வளர்வதற்குத் தேவையான அனைத்து இயற்கை மற்றும் மூலோபாய வளங்களும் திருகோணமலையில் அமைந்து காணப்படுகின்றன. இதன் மூலம் பிராந்தியத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், திருகோணமலையை உலக முதலீட்டு வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுடன், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

manel