அறிவு சமத்துவமின்மையை உருவாக்கும் கருவியாக AI மாறிவிடக் கூடாது!
ஐக்கிய நாடுகளின் முதன்மையான உலகளாவிய டிஜிட்டல் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை வகுக்கும் மாநாடான “தகவல் சமூகம் பற்றிய உலக மாநாடு” (WSIS Forum 2026) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
அங்கு ‘தடைகளற்ற தகவல்: அனைவருக்கும் அறிவுக்கான அணுகல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற மாநாட்டில் (Leaders TalkX 4), டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமாக பங்கேற்ற கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய முதன்மை உரை நிகழ்த்தினார்.
இதன்போது உரையாற்றிய கலாநிதி விஜயசூரிய,
”செயற்கை நுண்ணறிவு (AI) என்பது சமூகங்களுக்கு இடையே நிலவும் அறிவு மற்றும் தகவல் அணுகல் சமத்துவமின்மையை மேலும் விரிவுபடுத்துவதாக அமையக்கூடாது என சுட்டிக்காட்டினார். மாறாக, தற்போதுள்ள சமூக மற்றும் டிஜிட்டல் பிரிவினைகளை நீக்கி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் ஒரு வலுவான தகவல் தொடர்பு பாலமாக அது அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இணையம் வழியாக தகவல் ஜனநாயகமயமாக்கப்பட்ட போதிலும், மொழி, எழுத்தறிவு மற்றும் தகவல் தொடர்பு அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் சில பிரிவினருக்கு அதன் பலன்கள் சமமற்ற முறையிலேயே கிடைக்கின்றன என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) சந்தை சக்திகளின் அடிப்படையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டால், வணிக ரீதியாக ஈர்க்கக்கூடிய மற்றும் உயர் தரவு அமைப்புகளைக் கொண்ட பெரும்பான்மை சமூகங்களுக்கு மட்டுமே அது மட்டுப்படுத்தப்படும் அபாயம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட, பன்மொழி மற்றும் பல்லின அடையாளங்களைக் கொண்ட இலங்கையின் ‘முன்னணி செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உருமாற்றச்’ செயல்முறை மூலம் இந்த சவாலும் வாய்ப்பும் மிகச்சரியாகப் பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் உருமாற்ற வரைபடத்தில் (Digital Transformation Blueprint), மொழி ரீதியான சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ‘கிடைமட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக’ (Horizontal Digital Public Infrastructures – DPI) நிறுவப்பட்டுள்ளதாக அவர் இங்கு வெளிப்படுத்தினார்.

