அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (22) அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன், முக்கிய நிருவாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.

அவரின் முதலாவது நிகழ்வு, காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள கலாசார மையத்திற்கான அடிக்கல்லினை நட்டி வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணியளவில் அம்பாறை நகர மண்டப வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வணிக வளாகத்திற்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதனையடுத்து பிற்பகல் 02.00 மணியளவில், அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தலைமைதாங்கி நடாத்தவுள்ளார். இதன்போது மாவட்டத்தின் தற்போதைய தேவைகள், முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அம்பாறை மாவட்ட பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் அம்பாறை மாவட்டத்தின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

manel