அட்டாளைச்சேனை அலியார் வீதி 1.5 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் PSDG திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை அல்-முனீறா வட்டாரத்தில் உள்ள 06 ஆம் பிரிவு அலியார் வீதியினை 1.5 மில்லியன் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூரின் விசேட சிபாரிசின் பிரகாரமே இவ்வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான இளம் சமூக சேவகர், தொழிலதிபர் றியா மசூர் [Bsc(Hons) in IT(UK) ,LLB(Hons)], குறித்த அலியார் வீதியின் வேலைத்திட்டங்களை (18) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அதன் தரத்தினையும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த அலியார் வீதி மிக நீண்டகாலமாக எவ்வித புனரமைப்புமின்றி, குன்றும் குழியுமாகவே காணப்பட்டது. இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக மழை காலங்களில் இவ்வீதியூடான போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இவ்வீதியின் அவல நிலை பற்றி றியா மசூரின் கவனத்திற்கு, பொதுமக்களால் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் மேற்கொண்ட உடனடி முயற்சியின் பயனாக இவ்வீதி தற்பொழுது நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனுமதியினை வழங்கி உதவிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் இதற்கு பக்கபலமாக செயற்பட்ட பிரதேச சபையின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் இப்பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

